பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரீஃப், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை லண்டன் அழைத்துச் சென்று சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிகிச்சைக்கு பின் நாடு திரும்பி, ஊழல் குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
(விமானம் நிலையம் செல்லும் நவாஸ் ஷெரீஃப் காரை சூழ்ந்துகொண்டு கோஷமிடும் அவரது கட்சித் தொண்டர்கள்)
கடந்த 10-ஆம் தேதி நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப்புடன் லண்டனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. ஆனால் வெளிநாடு செல்ல அனுமதி இல்லாதவர்கள் பட்டியலில் அவர் பெயர் இருந்ததால், அவரால் செல்ல முடியவில்லை. இதையடுத்து எதிர்கட்சிகள் இம்ரான் கான் தலைமையிலான அரசை கடுமையாகச் சாடின.
பின்னர் அமைச்சரவை கூடி, வெளிநாடு செல்ல தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்கியது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.