இந்தியா, சீனாவுக்கு 100% வரி.. ட்ரம்பைத் தொடர்ந்து நேட்டோ எச்சரிக்கை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்திருக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பானது, அமெரிக்க நலன்களுக்கு விரோதமாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக அந்நாடு அடிக்கடி எச்சரித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”பிரிக்ஸ் கூட்டமைப்பே அமெரிக்காவைப் பாதிக்கும் நோக்கில்தான் உருவாக்கப்பட்டது. அமெரிக்க டாலரின் மதிப்பைச் சிதைத்து, உலகளாவிய தரநிலையிலிருந்து டாலரின் மதிப்பை வெளியேற்றுவதே அவர்களின் நோக்கமாகும். அவர்கள் அந்த விளையாட்டை ஆட விரும்பினால், எங்களாலும் பதிலடி விளையாட்டை ஆட முடியும். பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை அழிக்க முயற்சிக்கின்றன. வேறொரு நாட்டின் நாணயத்தை உலகத் தரநிலையாக மாற்ற முயற்சிக்கின்றன.
உலகளாவிய தரநிலையிலிருந்து டாலரின் மதிப்பை அமெரிக்கா இழந்தால், உலகப் போரில் அமெரிக்கா தோற்பதற்குச் சமம். அதை நடக்கவிட மாட்டோம். டாலரின் இடத்திற்கு சவால் விடும் எவரும் அதற்காக பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விலையைக் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பார்களா என்பது தெரியவில்லை. அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை கூட்டாக இணைந்து கொண்டு வர முயற்சித்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் கூடுதல் வரியை செலுத்த நேரிடும். மேலும், எந்தவொரு காரணத்துக்காகவும் நீங்கள் வரியை அதிகரிக்க முடிவு செய்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணுடன், நாங்கள் கூடுதலாக 25 சதவீதம் வரியை சேர்த்துவிடுவோம். அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பு அவசியம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். அதாவது, அடுத்த 50 நாட்களில் ஓர் அமைதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்குபவர்கள் மீது 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். முன்னதாக, 90 நாள்களாக இருந்த இந்த அவகாசம் கடந்த ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், இதனை மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், இரண்டாம் நிலை வரிவிதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “மாஸ்கோவில் உள்ள நபர் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், அவர்களுடன் வணிகள் செய்யும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும். குறிப்பிட்ட மூன்று நாடுகளிடமும் நான் ஊக்கப்படுத்துவது என்னவென்றால், பீஜிங் அல்லது டெல்லியில் நீங்கள் வாழ்பவராக இருந்தால், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டும். இல்லையெனில், எங்களது வரி விதிப்பு உங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடும். சீனா, இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள், ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு பேசி, அமைதிப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த வலியுறுத்த வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக, ரஷ்யாவைப் பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தீவிரம்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, ரஷ்ய பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்றும் 50 நாட்களுக்குள் ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டல், விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.