நேட்டோ கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியா? அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகள் எரிப்பு!
பிரான்ஸில் மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகள் எரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 70 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 779 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தொடங்கிய போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ளன.
செய்தியாளர் - M.மீரா
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வு, கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறைந்து வருவதைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது வாரமாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தில் சுமார் 3.2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டங்களின்போது லியோன் நகரில் சிலர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொடிகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இஸ்ரேல் கொடியை மின்சார ரயில் நிலையத்தின் கண்ணாடி மேல்கூரையில் விரித்து, அதன் மீது ஏறி மிதித்ததுடன் தீயும் வைத்தனர். மேலும், சில போராட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனின் அரசுக்கு எதிரான முழக்கங்களும் போராட்டங்களில் ஒலித்து வருகின்றன. பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாலஸ்தீனக் கொடிகளும் காணப்பட்டன.
பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றாலும், பாரிஸ், லியோன், மார்சே உள்ளிட்ட சில நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. சில போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்கள் உள்ளிட்ட பொருட்களை வீசினர். இதையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
பாரிஸில் காவலர் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சனிக்கிழமை இரவு மட்டும் 565 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் வெளியான தகவலின்படி கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 779 ஆக உயர்ந்தது.
இதற்கு முன்பு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 5.5 லட்சம் பேரும், அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 4.1 லட்சம் பேரும் பங்கேற்றதாக அரசு தெரிவித்திருந்தது. தற்போது மூன்றாவது வாரத்தில் இந்த எண்ணிக்கை 3.2 லட்சமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்கள் பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்கள் தலைமையில் தொடங்கிய இந்தப் போராட்ட அலை தற்போது ஜெர்மனி, போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

