“முதன்முதலாக நிலவில் காலடி வைக்கும் பெண்” - நாசா தகவல்
2024ம் ஆண்டு நிலவுக்கு ஆட்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, அதில் நிச்சயம் ஒரு பெண் விண்வெளி வீரர் இடம்பெறுவார் எனத் தெரிவித்துள்ளது.
50 வருடங்களுக்கு முன்பு அப்பல்லோ 11 மூலம் பயணித்து முதன்முதலாக நிலவில் காலடி வைத்தார் நாசா விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங். அதற்குப் பின் 11 பேர் நிலவில் காலடி வைத்துள்ளனர். இதுவரை 12 பேர் நிலவுக்கு சென்றிருந்தாலும் அதில் ஒருவர் கூட பெண் கிடையாது. இந்தக் குறையை போக்க தற்போது நாசா முடிவு செய்துள்ளது.
2024ம் ஆண்டு நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டத்தில் நாசா உள்ளது. அதில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார் என நாசா தெரிவித்துள்ளது. 2024 நிலவு திட்டம் ஆணுக்கு ஒரு அடுத்தப்படியாக அமையுமென்றும், பெண்ணுக்கு மாபெரும் பாய்ச்சலாக இருக்குமென்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள நாசா, 2024ம் ஆண்டு நிலாவுக்கு ஆட்களை அனுப்பும் லட்சிய திட்டத்தில் உள்ளோம். அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த முறை எங்களது விண்வெளி நிறுவனம் ஒரு முகாமை நிலவில் உருவாக்க விரும்புகிறது. முக்கியமாக இந்தத் திட்டத்தின் மூலம் பெண் விண்வெளி வீரர் ஒருவர் முதன்முதலாக நிலவில் காலடி வைக்க உள்ளார்.
ஆண், பெண் சமத்துவத்தை குறிக்கும் விதத்தில் இது நடத்தப்பட உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர். முதன்முதலாக மனிதன் நிலவில் காலடி வைத்து 50 வருடங்களுக்குப் பிறகு பெண் நிலவில் நடக்க உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.