நியூயார்க் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய பனிப்பாறை உடைய போகிறது - நாசா
அண்டார்டிகாவில், நியூயார்க் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்துவிழ வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைகள் உருகுகின்றன. பனிப்பாறை உருகுவதாலும் கடல் மட்டம் உயர்கின்றது என கூறப்படுகிறது. தற்போது அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெரிய பரப்பளவு கொண்ட அண்டார்டிகாவை செயற்கைக்கோள் உதவியுடன் நாசா கண்காணித்து வருகிறது. பனிப்பாறைகளில் தன்மை, உருகும் வேகம், கடல்மட்டத்தின் உயர்வு என அனைத்தையும் நாசா கண்காணிக்கிறது. இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பனிப்பாறையின் பிளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பிளவு நீண்டு சென்றால் மற்றொரு பிளவுடன் இணைந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று துண்டாக உடைந்துவிழும் என்றும் கூறியுள்ளது. அந்த பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் (1710 சதுர கிமீ) என்ற அதிர்ச்சியையும் நாசா கூறியுள்ளது.
பனிப்பாறைகள் உடைவது இயற்கை தான் என்றாலும், பெரிய அளவிலான பனிப்பாறைகள் உடைவதை நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்றும், நாம் சுற்றுச்சூழலில் கவனமாக இருக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதலால் இந்த பனிப்பாறைகள் அதிகம் உருகுவதாகவும், இதே வேகத்தில் சென்றால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அண்டார்டிகாவின் மொத்தப் பனியும் உருகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் கடல்மட்ட அளவு 210 அடிவரை உயரும் என்றும் இதனால் பல கோடி மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டி வரும் என்றும் கூறப்படுகிறது.