டைட்டனுக்கு ஆளில்லா விமானத்தை அனுப்பவுள்ள நாசா !
சனியின் துணைக் கோளான டைட்டனில் ராட்சத ஆளில்லா விமானத்தை அனுப்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை நாசா செய்துவருகிறது. புதிய கிரகங்கள் கண்டுபிடித்தல், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை அறிதல் போன்ற பணிகளில் நாசா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் சனியின் துணைக் கோளான டைட்டனில் ராட்சத ஆளில்லா விமானத்தை அனுப்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக சனி கோளின் தரைப் பகுதி மற்றும் கடல் பகுதியை ஆய்வு செய்வதற்காக Titan Mare Explorer என்ற விண்கலத்தை 2023 ஆம் ஆண்டு தரையிறக்கவுள்ளது. இதையடுத்து பனி படர்ந்த நிலவாக காணப்படும் டைட்டன் உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளைக் கொண்டுள்ளதா என்பதை அறியவே ட்ராகன்ஃப்ளை (Dragonfly) எனும் ஆளில்லா விமானத்தை அனுப்பும் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி டைட்டனுக்கு அனுப்பப்படும் ராட்சத ஆளில்லா விமானம் 2034 ஆம் ஆண்டு தரையிறங்கும். இது டைட்டனின் மேற்பரப்பில் சுமார் 108 மைல் தூரத்திற்கு சென்று சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.