சரியான வானிலைக்காக காத்திருக்கும் நாசா: இன்று விண்ணில் பாயுமா ராக்கெட்?
விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 2 வீரர்களுடன் செல்லவுள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இன்று ஏவப்பட்ட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் நாசாவைச் சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வானில் பறக்க தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழன் ராக்கெட் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை சரியாக இல்லை எனக் கூறிய நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 2 வீரர்களை சுமந்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் இன்று விண்ணில் பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள நாசா, ஸ்பேஸ் எக்ஸ் ஃபல்கான்9 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். இதற்காக வானிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் சாதகமான வானிலைக்கு காத்திருக்கிறோம். இன்று ஏதேனும் தடங்கல் என்றாலும் நாளை ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது திட்டமும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படையினரின் கணிப்புப்படி ராக்கெட் ஏவுவதற்கு சனிக்கிழமை 50% சாதகமான வானிலை இருக்குமென கூறப்பட்டுள்ளது. நாளை 60% சாதகமான வானிலை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.