நிலவுக்கு மனிதனை அனுப்பும் விண்கலனின் சோதனை ஓட்டம் மீண்டும் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

நிலவுக்கு மனிதனை அனுப்பும் விண்கலனின் சோதனை ஓட்டம் மீண்டும் ஒத்திவைப்பு! காரணம் என்ன?
நிலவுக்கு மனிதனை அனுப்பும் விண்கலனின் சோதனை ஓட்டம் மீண்டும் ஒத்திவைப்பு! காரணம் என்ன?

நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான விண்கலனின் சோதனை ஓட்டத்தை நாசா மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க திட்டமிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்குவதாக திட்டமிடப்பட்டது.

பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் விண்கலம் புறப்பட தயாராக இருந்தநிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. அன்று ஒத்திவைக்கப்பட்ட அந்த முயற்சி செப்டம்பர் 3 ஆம் தேதியான இன்று மேற்கொள்ளப்பட மீண்டும் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றும் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக அந்த முயற்சி 2வது முறையாக கைவிடப்பட்டுள்ளது.

அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. பொறியாளர்கள் எரிபொருள் கசிவைக் கண்டறிந்ததும், ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. அடுத்து ராக்கெட்டை எப்போது மீண்டும் ஏவப்படும் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

322 அடி உயர் கொண்ட பிரம்மாண்ட ராக்கெட் முதலில் ஆள் இன்றி அனுப்பப்பட்டு சோதிக்கப்படும். முதல் சோதனை 6 வார காலத்திற்கு நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இடையில் விண்கலனில் பழுது ஏதும் ஏற்பட்டால் அதை திரும்ப அழைத்துக்கொள்ளும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் என்ற இந்த ஒட்டுமொத்த சோதனை ஓட்ட திட்டத்திற்கும் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதனை நிலவுக்கு அனுப்பும் போது செலவு சுமார் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com