சித்தி, அம்மாவின் பேரன்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கமலா ஹாரிஸ்

சித்தி, அம்மாவின் பேரன்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கமலா ஹாரிஸ்
சித்தி, அம்மாவின் பேரன்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அண்மையில் அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டு நிகழ்வில் பேசியிருந்தார். 

அதில் அவரது அம்மா குறித்தும், குடும்பம் குறித்தும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

‘இன வெறிக்கு  எதிராக பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சுதந்திரம் கிடைத்தது. இன்று நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்திற்கு காரணம் பலரது போராட்டங்கள் தான். இதில் பெண்களின் பங்கும் அதிகம். பேனி லூ ஹேமர், மேரி சர்ச் டெரெல் என பல பெண் போராளிகளின் பெயர்களும், அவர்களது கதையும் நாம் பேசியிருக்கிறோம். 

ஆனால் இன்று உலகம் அதிகம் அறியாத ஒரு பெண்ணை பற்றி நான் பேசவுள்ளேன். அவரது கதை யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பெண்ணின் தோள்களில் தான் நான் வளர்ந்தேன். என் அம்மா ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் தான் அந்த பெண்.  

19 வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் என் அம்மா. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிப்பதற்காக வந்தவர். இங்கு தான் என் அப்பா டொனால்ட் ஹாரிஸை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

1960இல் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்ற சிவில் ரைட்ஸ் மூவ்மெண்ட்டில் இருவரும் பங்கேற்றனர். என் அம்மாவின் பிஸியான வேலை பளுவுக்கு நடுவே என்னையும், என் சகோதரியையும் கவனித்துக் கொண்டார். அதிகாலை எழுந்து பள்ளி செல்வது, வீட்டு பாடங்களை எழுதுவது என அனைத்தையும் கவனித்து கொள்வார்.

எங்கள் இருவரையுமே மிக தைரியமான பெண் பிள்ளைகளாகவே வளர்த்தார். நாங்கள் இருவருமே கருப்பின பெண்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். 

எங்களுக்கு இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை பழக்குவித்தார்.குடும்பம் தான் அனைத்தும் என சொல்லுவார். அதன்படி எனது பிள்ளைகள், சித்திகள், உறவினர்கள், சகோதரி மாயா ஆகியோர் தான் என் குடும்பம். அவரது வார்த்தைகளை பொன்மொழிகளாக எப்போதுமே பின்பற்றுவேன். அது தான் நான் எட்டி வரும் முன்னேற்றங்களுக்கு காரணம்’ என தெரிவித்துள்ளார். 

இதனிடையே கமலா ஹாரிஸ் பேசும்போது ‘சித்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அது வைரலாகியுள்ளது. அமெரிக்க அரசியலில் முதன்முதலாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன் நெகழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com