“வாட்ஸ் அப் டீலை முடித்தது என் நாய்தான்”- மார்க் ஜூகர்பெர்க்
வாட்ஸ் அப் நிறுவனம் உடனான டீலை முடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது தன் நாயான 'பீஸ்ட்' தான் என்று மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்து வருவது ஃபேஸ்புக். அதேபோல் தகவல் பரிமாற்றத்தில் முன்னணியில் இருப்பது வாட்ஸ் அப். ஆரம்ப காலத்தில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியபோது வாட்ஸ் அப் செயலியை கவனித்த பேஸ்புக் நிறுவனம், அதனை 2014-ஆம் ஆண்டு வாங்கி தனது நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.
தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என மூன்று முக்கிய நிறுவனத்தின் உரிமையாளராக மார்க் உள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் லூரியா நடத்திய நேர்காணலில் வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியது குறித்து சுவாரசிய தகவல் ஒன்றை மார்க் பகிர்ந்துள்ளார். அதில் வாட்ஸ் அப் நிறுவனம் உடனான டீலை முடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது தன் நாயான 'பீஸ்ட்' தான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நினைவுகளை பகிர்ந்த மார்க், ''நானும், அப்போதைய வாட்ஸ் அப் உரிமையாளருமான ஜானும் டீல் குறித்து என் வீட்டில் ஆலோசித்துக் கொண்டு இருந்தோம். ஜான் முடிவெடுக்காமல் குழப்பத்தில் இருந்தார். யோசித்து முடிவெடுக்கலாம் என்பது போலவே அவர் இருந்தார். அப்போது என் நாய் பீஸ்ட் அறைக்குள் வந்தது. நானும், ஜானும் அமைதியாக அமர்ந்திருந்தோம்.
''இவர்கள் ஏன் இப்படி அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்'' என்று யோசிப்பதுபோல எங்களை பீஸ்ட் உற்று பார்த்தது. உடனடியாக துள்ளி குதித்து ஜானின் மடியில் ஏறி அமர்ந்தது. பீஸ்ட்டை ஜான் கொஞ்சத் தொடங்கினார். உடனடியாக இந்த டீல் சரியாக வரும் என்று தோன்றுவதாக ஜான் கூறி டீலை முடித்தார்'' என்று தெரிவித்தார். மேலும் ''அந்த டீலின் ரகசிய ஆயுதம் என் நாய் பீஸ்ட் தான்'' என மார்க் நகைச்சுவையாக தெரிவித்தார்.
2016ம் ஆண்டு தன் நாயுடன் தன் மகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மார்க், ''என் மகள் பேசிய முதல் வார்த்தையே டாக் (Dog) என்பது தான் என்று தெரிவித்து இருந்தார். அன்று முதல் மார்க் வீட்டு பீஸ்ட் நாயுக்கு சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் வட்டாரமே இருக்கிறது.