கொரோனா அச்சுறுத்தல்: சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகை!!

கொரோனா அச்சுறுத்தல்: சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகை!!
கொரோனா அச்சுறுத்தல்: சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்புத் தொழுகை!!

இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அவர்கள் அனைவரும் மசூதி அல்லது பெரிய மைதானங்களுக்குச் சென்று சிறப்புத்தொழுகை நடத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக  இடைவெளியுடன் தொழுகை நடத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் பக்ரீத் பண்டிகை நாளன்று முகக் கவசத்துடன் மிகக்குறைந்த அளவு மக்களே பங்கேற்ற சிறப்புத் தொழுகை நடந்துள்ளது. இங்கு அனைவரும் முகக்கவசத்துடன் தொழுகைக்கு வரவேண்டும் என முன்னதாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

உலகில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனேசியா கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் போராடிவருகிறது. இதனால் சிறப்புச் சடங்குகளையும் மசூதிகள் குறைத்துக்கொண்டன. பெரும்பாலான மசூதிகள் ஆடுகள், ஒட்டகங்களை வெட்டி மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் நடைமுறையை ரத்து செய்துவிட்டன.   

“இந்த ஆண்டு ஈத் அல் ஆதா (பக்ரீத்) பண்டிகை கடந்த ஆண்டுகளைவிட மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தோம். சமூக இடைவெளியுடன் தொழுகை செய்தோம்” என்கிறார் ஜகர்த்தா நகரைச் சேர்ந்த தேவிதா இல்ஹாமி. தொழுகைக்கான விரிப்பை அவரே எடுத்துவந்துவிட்டார். மார்க்கர் வைத்து தனக்கான அமரும் இடத்தையும் வட்டமிட்டுக்கொண்டார்.

இதேபோல மலேசியா, தாய்லாந்து, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் முஸ்லிம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இந்தியாவில் சனிக்கிழமையன்று பக்ரித் கடைப்பிடிக்கப்படுவதால், மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் உள்ள மசூதியி்ல மிகக் குறைவான மக்களே அனுமதிக்கப்படுவர் எனவும் தெருக்களில் தொழுகை நடத்தப்படாது என்றும் நகோடா மசூதியின் மூத்த மதகரு சபீக் காசிம் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் மசூதிகள் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், தெர்மல் ஸ்கேனர் செய்யப்பட்டே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைகழுவவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆறு அடி இடைவெளியில் தொழுகை நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com