நோய்வாய்ப்பட்ட அம்மா அழைத்து வரவில்லை? டாக்ஸி ஓட்டுநர்கள் 4 பேரை கொன்ற ரவுடி கும்பல்!
வாடகை கார் ஓட்டுநர்கள் 4 பேரை கடத்தி துன்புறுத்தி, ரவுடி ஒருவன் கொலை செய்துள்ளான். உடல்நிலை சரியில்லாத தன் தாய் அழைத்து வாடகை கார் வரவில்லை என்பதால் பழிக்குப்பழியாக இந்த கொலைகளை அவன் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்
பிரேசிலில் வாடகை கார் ஓட்டுநர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 23 வயது முதல் 48 வயதுக்குட்பட்ட 4 ஓட்டுநர்களில் இருவர் உபர் நிறுவனத்துக்கு கார் ஓட்டியவர்கள். மற்ற இருவர் வேறு வாடகை கார் நிறுவனத்துக்கு கார் ஓட்டியவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரவுடி ஒருவர் வாடகை கார் ஓட்டுநர்களை அழைத்து ஒவ்வொருவரையும் கடத்தி துன்புறுத்தி கொலை செய்துள்ளார்.
ஏன் இந்த கொலைகள் செய்யப்பட்டன என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் முதற்கட்ட விசாரணையின் படி, ரவுடியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாதபோது வாடகை காருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் வாடகை கார் வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி, பழிவாங்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு ஓட்டுநராக அழைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய இருவர், போலீசாருடன் நடந்த சண்டையின்போது சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள போலீசார், கொலையாளி ஒவ்வொரு ஓட்டுநரையும் அழைப்பார். அவர்கள் வந்தததும், துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி கட்டிவைத்து துன்புறுத்துவார். பின்னர் அவர்களை கொலை செய்வார். ஐந்தாவதாக அழைக்கப்பட்ட ஓட்டுநர் கொலையாளிடம் இருந்து தப்பித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.