இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி உணர்வுப்பூவமாக நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்சியில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனும், இறுதி யுத்தத்தில் பெற்றோரை இழந்த இளம்பெண் கேசவன் விஜிதாவும், ஈகை சுடரினை ஏற்றி வைத்து நினைவேந்தலை தொடங்கி வைத்தனர். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மே 18ஆம் தேதியும் தமிழர் இன அழிப்பு நாளாக தொடர்ந்து அனுசரிக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார்.
இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நீதி வழங்கவேண்டும், முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 9ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை என்றும் அதனை சரி செய்ய சர்வதேச சமூகம் உதவிகள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தினர் முழுவதுமாக வெளியேற வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தனது உரையில் வலியுறுத்தினார். இதற்கிடையே இலங்கை அரசு சார்பில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

