`வேஸலின் இருக்கா?’- கைகளில் நிரந்தர டாட்டூ போட்ட 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

`வேஸலின் இருக்கா?’- கைகளில் நிரந்தர டாட்டூ போட்ட 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
`வேஸலின் இருக்கா?’- கைகளில் நிரந்தர டாட்டூ போட்ட 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த லைசன்ஸ் இல்லாத ஒரு டாட்டூ ஆர்டிஸ்ட், 10 வயது சிறுவனொருவனுக்கு அவனது தாயின் அனுமதியுடன் (தாயும் டாட்டூ ஆர்டிஸ்ட் என சொல்லப்படுகிறது) உடலில் மிகப்பெரிய நிரந்தர டாட்டூவொன்றை போட்டிருக்கிறார். இதற்காக அந்த டாட்டூ ஆர்டிஸ்டுக்கும், அக்குழந்தையின் தாய்க்கும் சிறைத்தண்டனை கொடுத்துள்ளது அமெரிக்க காவல்துறை.

இதுகுறித்து Town of Lloyd காவல்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி, 33 வயதாகும் க்ரிஸ்டல் தாமஸ் (சிறுவனின் தாய்) என்பவர் அக்.4-ம் தேதியே கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது `குழந்தையின் நலனுக்கு கேடு விளைவித்த’ காரணத்துக்காக சட்டம் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 20 வயதாகும் ஆஸ்டின் ஸ்மித்தும், கடந்த மாதமே இதேகாரணத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

முதற்கட்ட தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட குழந்தையின் கையில்தான் டாட்டூ போடப்பட்டிருப்பதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட சிறுவன், பள்ளியில் இருந்தபோது தன் கைகளில் அசௌகரியம் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் உதவியுடன் செவிலியரை அனுகியுள்ளார். செவிலியரிடம் தனக்கு வேஸலின் வேண்டும் என கேட்ட சிறுவன், அதை தன் டாட்டூவில் போட்டு விடும்படி அவரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது சிறுவனின் டாட்டூவை பார்த்த அந்த செவிலியர், அதிர்ந்துபோய் காவல்துறையை அனுகியுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை, ஒருசில மாநிலங்கள் தவிர டாட்டூ போடுவதற்கு வயதுக்கட்டுப்பாடு இருப்பதில்லை. இருப்பினும் சிறுவன் இருக்கும் நியூயார்க்கில், 18 வயதுக்கு மேற்பட்டோர்தான் டாட்டூ போடமுடியும் என்று சட்டம் உள்ளது. சில இடங்களில் 14 வயதை தாண்டியபின், பெற்றோர் அனுமதியோடு டாட்டூ போடலாம் என்ற நிலையும் உள்ளது. குழந்தைகளுக்கு நிரந்தர டாட்டூ போடுவதென்பது, அவர்களின் உடலில் நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பெரியவர்களைவிடவும், அதிக ஆண்டுகளுக்கு குழந்தைகள் அதை எதிர்கொள்வர். ஆனால் அவர்கள் குழந்தைகள் என்பதால், அந்த வயதில் அவர்களால் சரியாக முடிவெடுக்க முடியாதென்றும், இதையொட்டி அமெரிக்க சட்டத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அங்குள்ள மருத்துவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு தாங்களும் ஆதரவளிக்கும் விதமாக தற்போது கைதாகியுள்ள சிறுவனின் தாய் மற்றும் டாட்டூ ஆர்டிஸ்டும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில், “சிறு குழந்தைகள் யாரும் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டாம். என் மகன், தற்காலிக டாட்டூ போடத்தான் கேட்கிறான் என நினைத்தே நான் ஒப்புக்கொண்டேன். நிரந்தர டாட்டூ எனத் தெரிந்திருந்தால் மறுத்திருப்பேன்” என்றுள்ளார்.

இதேபோல டாட்டூ ஆர்டிஸ்ட் ஆஸ்டின் ஸ்மித்தும் “என் வாழ்வில் நான் செய்த மிகமோசமான தவறு இதுதான். அந்த நேரத்தில், குழந்தையின் பெற்றோர் அனுமதித்திருந்ததால், டாட்டூ போட்டுவிடலாம் என எனக்கு தோன்றியது. அதனால் அதை செய்தேன்” என்றுள்ளார்.

டாட்டூ போட்டுக்கொண்ட அந்த 10 வயது சிறுவனும் “அன்று ஆஸ்டின் தாமஸ் எனக்கு டாட்டூ போட்டுவிட முடியாது என சொல்லியிருக்கலாம்” என்று வேதனை தெரிவித்துள்ளது, பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி, குழந்தைகளுக்கு டாட்டு போடுவதை பெற்றோர் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உயர்ந்து வருகிறது.

தகவல் உதவி: NYTimes

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com