200 பேருக்குப் பரிசு.. விமானப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் தாய்!
விமானத்தில் குழந்தை அழுதால் மற்ற பயணிகளுக்கு அசெளகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக தாய் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சியோல் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு 10 மணி நேர விமானப் பயணம்.. அந்த விமானத்தில் 4 மாத குழந்தையுடன் பயணித்த ஒரு தாய், குழந்தை அழுதால் சக பயணிகளுக்குச் சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக, சுமார் 200 பயணிகளுக்குப் பரிசுப் பைகளை வழங்கினார். அதில், மிட்டாய்கள், சூயிங்கம், காதுகளில் வைத்துக்கொள்ளும் இயர்ப்ளக்குகள் மற்றும் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்கும் ஒரு குறிப்பும் இருந்தது.
இதைக் கண்ட பயணிகள், சற்று வியந்தனர். அந்தப் பைகளில் இருந்த பொருள்களை விட, "என் குழந்தையால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது" என்று அவர் சொல்லாமல் சொன்ன அந்த அன்பான எண்ணம் அனைவரையும் நெகிழ வைத்தது. இந்தச் சம்பவம், பச்சிளம் குழந்தைகளுடன் பயணம் செய்வது எவ்வளவு சவாலானது என்பதையும், மற்றவர்களுக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என நினைக்கும் பெற்றோரின் மனநிலையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. விமானப் பயணம் முடியும் வரை அந்தக் குழந்தை ஒருமுறை கூட அழவில்லை என்பதுதான் இதில் இருக்கும் சுவாரசியம்.