ஆடு மேய்த்த சிறார்களுக்கு காட்சியளித்த மேரி மாதா
போர்ச்சுக்கல் நாட்டில் ஆடு மேய்த்த சிறார்களுக்கு மேரி மாதா காட்சியளித்ததாக கூறப்படும் 3 சிறார்களில் 2 பேருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்தில் 1917 ஆம் மேரி மாதா ஆடுமேய்க்கும் 3 சிறார்களுக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. ஏழைகளாகிய ஆடு மேய்க்கக்கூடிய ஜெசிந்தா(7), பிரான்சிஸ்கோ(9), லூசியா(10) ஆகிய மூவருக்கும் 1917 ஆம் ஆண்டில் 6 முறை மேரி மாதா காட்சியளித்தார். இதில் பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா ஆகியோர் 1919ல் அடுத்தடுத்து இறந்து விட்டனர். லூசியா கன்னியாஸ்திரியாக பணியாற்றி 2005 ஆம் ஆண்டு இறந்தார்.
இந்த ஆண்டு மேரி மாதா காட்சி அளித்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு போப் பிரான்சிஸ் போர்ச்சுக்கல் சென்றார். அங்கு பாத்திமா என்ற இடத்தில் 4 லட்சம் பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மேரி மாதாவை பார்த்த பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தாவை புனிதராக அறிவித்தார். அவர்களது கல்லறையிலும் வழிபாடு நடத்தினார்.