ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பயங்கரவாத தாக்குதல்!

ரஷ்யாவில் இசைநிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மாஸ்கோ
மாஸ்கோமுகநூல்

ரஷ்யாவில் இசைநிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மாஸ்கோவில் நடந்தது என்ன?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள, குரோகஸ் சிட்டி அரங்கத்தில் பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு, சுமார் 6,200 பேர் அமரக்கூடிய அரங்கில் மக்கள் இசை நிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்த சூழலில், தீடீரென அரங்கினுள் ராணுவ உடை அணிந்து நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீவிர மீட்பு பணி

இதனால்,அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்விடத்தில் மீட்பு பணியும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

தீயாய் காட்சியளித்த அரங்கம்

சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அரங்கிலிருந்தவர்கள் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் வேறு சிலர் நெருப்பில் சிக்கிக்கொண்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா எச்சரிக்கை

இது போன்ற ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா அன்மையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து இவர்கள் டெலிகிராம் ஆப் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாஸ்கோ புறநகர்ப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த மக்கள் திரளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒரு காலத்தில் ஈராக் மற்றும் சிறியாவின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முயன்ற போராளிக் குழுவான இஸ்லாமிய அரசு,இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது என்று அமாக் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கண்டனம்

இச்சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைன் உள்ளிட்ட நாட்களும் தங்களின் கண்டனத்தினை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், ”மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா ஒற்றுமையாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா விமான நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் தலைநகரம் முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பரந்த நகர்ப்புற பகுதி. நாடு முழுவதும் அனைத்து பெரிய அளவிலான பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் பதவி ஏற்றுள்ள சூழலில், இந்த பயங்கரவாத தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com