உலகப்போரில் அமெரிக்கா வீசிய 500 கிலோ குண்டு கண்டெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது வீசப்பட்ட வான்வழி வெடிகுண்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
ஜெர்மனியின் லூட்விக்ஷாபென் என்னுமிடத்தில் கட்டுமான பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு மண்ணுக்குள் மூழ்கியபடி இருந்தது. சுமார் 500 கிலோ எடை உடைய இந்த வெடிகுண்டை பார்த்தும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கிட்டத்தட்ட 18,500 மக்கள் தங்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெற்று விட கூடாது என்ற காரணத்திற்காக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தங்களின் தீவிர முயற்சியால் 500 கிலோ எடையுள்ள அந்தக் குண்டை செயலிழக்கச் செய்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடி அவர்கள் வெடிகுண்டை செயலிழக்க செய்தனர். இதனையடுத்து மக்கள் நிம்மதியடைந்தனர். அத்தோடு தங்களின் இருப்பிடங்களுக்கு மீண்டும் பொதுமக்கள் வந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டாக இது இருக்கலாம் எனத் தெரிகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து சுமார் 70 ஆண்டுகள் தாண்டிவிட்டது. இருப்பினும் ஜெர்மனியின் பல இடங்களில் அவ்வப்போது குண்டுகள் கண்டுடெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்படுவது அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.