சீனாவின் கிரடிட் ஸ்கோரைக் குறைத்த மூடி

சீனாவின் கிரடிட் ஸ்கோரைக் குறைத்த மூடி
சீனாவின் கிரடிட் ஸ்கோரைக் குறைத்த மூடி

சீனாவின் கடன் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாக உலக நாடுகளை பொருளாதாரரீதியில் மதிப்பிடும் முதலீட்டு ஆலோசனை அமைப்பான மூடி (Moody’s) அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனை அளவிட பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமான அமைப்பாக மூடி கருதப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கிரடிட் ஸ்கோர் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்தும் அளவீடை நிர்ணயிப்பதுண்டு. அந்த வகையில் சீனாவின் சமீபத்திய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையில் அந்நாட்டின் உள்நாட்டு கரன்சி மற்றும் வெளிநாட்டு கரன்சி மாற்றும் திறனை Aa3 எனும் மதிப்பீட்டில் இருந்து A1 என்ற மதிப்பீட்டுக்கு மாற்றியுள்ளது.

இதனால் சீனா பிற நாடுகளிடமிருந்து கடன் வாங்கும் தன்மை பாதிக்கப்படும். கிரடிட் ஸ்கோர் குறைந்துள்ளதால், மற்ற நாடுகள் சீனாவுக்கு அளிக்கும் கடன் தொகையை குறைக்கும் சூழல் ஏற்படும். இதனால்,பாகிஸ்தான் உள்ளிட்ட சிறிய நாடுகளுக்கு சீனா அளித்து வரும் நிதியுதவி போன்றவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. சீனாவின் அதிகரித்து வரும் கடன் உலக பொருளாதார சமநிலையைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மூடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையும் என்றும், அந்நாட்டு பொருளாதார வலிமை வரும் ஆண்டுகளில் குறையும் என்றும் மூடி அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தினைக் கொண்டுள்ள சீனாவுக்கு பொருளாதாரரீதியில் இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கடந்த 1989ம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவின் கிரடிட் ஸ்கோர் முதல்முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் சீனாவுக்கு மட்டுமானதல்ல. அந்த நாட்டுக்கு கடன் கொடுத்த நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. சீனாவால் அந்த கடனை முறையாகத் திரும்ப செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இந்த பிரச்னைகளால் நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டினை 6.9 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக சீனா குறைத்துள்ளது. அதேநேரம் சீனாவின் பொருளாதாரம் விரைவில் சமநிலையை அடையும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மூடி அமைப்பின் இந்த அறிவிப்பு பொருத்தமற்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாகவும் சீனாவின் நிதியமைச்சகம் விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com