இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்தியா வந்திருந்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர்.மெக்மாஸ்டர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மோடியின் அமெரிக்கா பயணத்திற்கு உகந்த தேதியை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து விரைவில் முடிவு செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியும் டிரம்பும் ஜெர்மனியில் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டில் தான் முதல்முறையாக சந்திப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே இரு நாட்டு உறவு குறித்து பேச மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர்.மெக்மாஸ்டர், பிரதமர் மோடியைச் சந்தித்ததோடு பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை செயளர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியாதான் அமெரிக்காவின் பிரதான ராணுவ கூட்டாளியாக இருக்கும் என உறுதியளித்தாக தெரிகிறது.