தடுப்புக்காவலில் உள்ள இன்டர்போல் தலைவர் திடீர் ராஜினாமா!
சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இன்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு இன்டர்போல். 192 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள இவ்வமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான்ஸில் அமைந்துள்ளது.
இதன் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங்க் ஹாங்வே பதவி வகித்து வந்தார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் வசித்து வந்த இவர், சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது முதல் முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது. சீன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் அவர் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவர் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் மீது என்ன விசாரணை நடைபெறுகிறது என்ற விவரம் கூறப்படவில்லை. இந்நிலையில் அவர் இன்டர் போல் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதற்காக அவர் ராஜினாமா செய்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது மூத்த துணைத்தலைவராக இருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் யாங், செயல் தலைவராக இருப்பார் என கூறப்பட்டுள் ளது.