கம்போடியா, லாவோஸ் நாடுகளிலும் ஆள்கடத்தல் மோசடி - வெளியுறவுத்துறை எச்சரிக்கை

கம்போடியா, லாவோஸ் நாடுகளிலும் ஆள்கடத்தல் மோசடி - வெளியுறவுத்துறை எச்சரிக்கை
கம்போடியா, லாவோஸ் நாடுகளிலும் ஆள்கடத்தல் மோசடி - வெளியுறவுத்துறை எச்சரிக்கை

போலி வேலை வாய்ப்பு மோசடி மூலம் மியான்மார் நாட்டுக்கு தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் கடத்தப்பட்டதைப் போலவே, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கும் பல இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல புகார்கள் சமீபத்தில் வந்துள்ள நிலையில், கம்போடியா நாட்டிலிருந்து 14 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆள்கடத்தல் கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்தியர்களை கடத்த முயற்சிப்பதால், போலி வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என வெளியுறவுதுறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய ஆள்கடத்தல் கும்பல்களின் தரகர்களாக செயல்படுவோர் விவரங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த 13 நபர்கள் மியான்மார் நாட்டிலிருந்து மீட்கப்பட்டு சென்னை திரும்பி உள்ள நிலையில் வெளியுறவுத்துறை கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு அறிவுரை அளித்துள்ளது. துபாயில் நல்ல சம்பளத்துடன் ஐடி வேலை என அழைத்துச் செல்லப்பட்ட பலரை தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்ததில் தரகர்களுக்கு முக்கியப்பங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக நதிகளை கடந்து எந்தவித ஆவணங்களும் இன்றி மியான்மார் நாட்டுக்கு கடத்தப்பட்டதாக சிக்கியவர்கள் புகார் அளித்துள்ளனர்.

மியான்மார் நாட்டின் தொலைதூரப் பகுதியான மியாவாடி என்கிற இடத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் பிட்காயின் மோசடி, சைபர் மோசடி போன்ற பல்வேறு இணையதள மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி முனையில் இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மோசடிப் பணிகளை சரிவர செய்யாவிட்டால் மிரட்டல் மற்றும் தண்டனை என கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.

புதிய தலைமுறை தொடர்ந்து மியன்மார் நாட்டில் சிக்கி இருந்தவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு, பிரச்னையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிக்கி உள்ளோரை மீட்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார்.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிக்கியுள்ளோரை மீட்கும்படி வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு கோரிக்கை வைத்தார். உடனடியாக மியன்மாரில் உள்ள இந்திய தூதர் வினை குமாரை தொலைபேசி மூலம் முரளிதரன் தொடர்புகொண்டு பேசினார்.

தாய்லாந்து மற்றும் மியான்மார் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் விரைந்து செயல்பட்டு மியான்மார் அரசை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தனியார் மூலமாகவும் முகாம்களில் சிக்கியிருந்தவர்களை மீட்க முயற்சி செய்யப்பட்டது. தொடர்முயற்சிக்குப் பிறகு முதல் கட்டமாக 32 இந்தியர்கள் மீட்டு தாய்லாந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 நபர்கள் பாங்காக் நகரில் இருந்து விமானம் மூலமாக டெல்லி அழைத்து வரப்பட்டு பின்னர் சென்னை அனுப்பப்பட்டனர்.

சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்த யாங்கோன் மற்றும் பேங்க்காக் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அரிந்தம் பாக்சி நன்றி தெரிவித்துள்ளார். வியட்நாம், கம்போடியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் சிக்கியுள்ள பிற இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. மியாவாடி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர் எனவும் சீன நாட்டைச் சேர்ந்த மாபியா கும்பல்கள் டிஜிட்டல் மோசடிகளுக்கு இவர்களை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com