“பெறுவதைவிட அதிகமாகவே தமிழகத்திற்கு நிதி வழங்குகிறோம்” - சென்னையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

“பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்PT

“நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்களுக்கு வங்கிகள் மூலமாக பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுகுறு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களுக்காக நிதியை நேரடியாக பயனாளிகளிடம் வழங்கினார்.

பின்னர் நிகழ்சியின் மேடையில் அமைச்சர் பேசியதாவது...

பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் திட்டம்:

”பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டம் கொண்டு செல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்குதான் கொடுத்துள்ளோம். வரிதொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.” என்றார். இது குறித்து அவர் கூறிய விரிவான விளக்கம் :

”2014-2023 மார்ச் வரை ரூ.6.23 லட்சம் கோடி வரிப்பணத்தை தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. பெற்றதைவிட அதிகமாகவே ரூ.6.96 லட்சம் கோடி பணம் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதுதவிர, ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவு சாலை திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மக்களுக்காக நிறைய திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறார். வீடு, சுகாதாரம், சாலை வசதிகள் என 17 திட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

அனைத்து திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும் என பிரதமர் திட்டமிட்டார். இதில் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 6.08 லட்சம் மக்கள் பயன்பெற்று இருக்கின்றனர். முக்கியமாக, சென்னையில் 1 லட்சத்துக்கும் மேல் வீடு கட்டும் நிதி கிடைத்து இருக்கிறது.

பாகுபாடு இல்லாமல் இத்திட்டம் அனைவருக்கும் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. ஆகையால், அமைச்சர் உள்ளிட்ட யாருடைய சிபாரிசும் தேவையில்லை.

கழிப்பறை வசதி 5.23 லட்சம் தமிழகத்தில் பயன்பெற கட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆயுஷ்மான் திட்டம் மூலம் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் 5 லட்சம் தொகைக்கான மருத்துவ வசதி பெற்று இருக்கின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு மத்திய அரசு சார்பாக ரேசன் பொருட்கள் வழங்கி வருகிறோம். 1.50 கோடி வங்கி கணக்குகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

முத்ரா லோன் 20.6 லட்சம் மக்கள் ரூ.16,330 கோடி சென்னையில் கடன் பெற்றுள்ளனர். அதேபோல் சிறுகடை வியாபாரிகளும் பயன் பெற்று இருக்கின்றனர். அதேபோல், மத்திய அரசின் வந்தே பாரத் ரயில் பெரம்பூரில்தான் தயாரிக்கிறோம்.

இதில், 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில்தான் இயங்கி வருகிறது. வடக்கு மட்டுமே கொண்டு செல்லாமல் தமிழக மக்களுக்கு பயன்பெறும் வகையில் அரசு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என புலம்புகின்றனர்.

மேலும், சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவ 17 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுதான் கொடுத்தது.

சென்னை மெட்ரோ 54 கி.மீ ஒடுகிறது. அதை தவிற 114 கி.மீ இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடக்கிறது. இதையும் 2014 முதல் மத்திய அரசுதான் செய்து வருகிறது.

மேலும், 50 ஆயிரம் கோடி செலவில் பெங்களூர் விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்தவும் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அரசுக்கான நிதி வட்டியில்லாமல் ரூபாய் 6,412 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது. இதை வட்டியில்லாமல் மாநில அரசு 50 வருடத்திற்கு பின் கொடுக்கலாம்

2014 முதல் 2023 மார்ச் வரைக்கும் தமிழகத்திடம் பெற்ற வரி 6,23,713.3 கோடி வந்து இருக்கிறது. இதில் 6,96,666 கோடி ரூபாய் மொத்தமாக தமிழகத்து மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பில் 2014 முதல் 57,557 கோடி வந்திருக்கிறது. இதில் NHAI சாலைகள் போடுவதற்கு ரூபாய் 37,965 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. தவிர, பள்ளிகள் கட்ட 11,116 கொடுத்துள்ளோம்.

கிராம்புறத்தில் வீடுகள் கட்ட 4,839 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது. இப்படி மத்திய அரசு வசூலித்த வரியை திருப்பி மாநில அரசுக்கே அளித்து இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. வரியையும் முழுமையாக மாநில அரசுக்குதான் கொடுத்துள்ளோம். 36,353 மாநில ஜி.எஸ்.டி 37,370.92 மத்திய ஜி.எஸ்.டி வசூலித்து இருக்கிறோம்.

வரி தொடர்பாக இன்னும் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலத்திற்கும் மாதம் மாதமாக கொடுத்து வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com