போருக்கு தயாராகும் அமெரிக்கா? சீண்டினால் பேரழிவு என ட்ரம்ப் எச்சரிக்கை
வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராகிவிட்டதால், மேற்கொண்டு பதற்றத்தை தூண்டுவது போல நடந்து கொள்வது நல்லதல்ல என்றும், அவ்வாறு நடந்து கொண்டால் மிகப் பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச வான் எல்லைகளில் பறக்கும் அமெரிக்க விமானங்களையும் சுட்டுத் வீழ்த்த தயங்கமாட்டோம் என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ அண்மையில் மிரட்டல் விடுத்தார். மேலும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் பிரகடனம் செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை அமெரிக்கா தேர்ந்தெடுக்காது என்றும், ஒருவேளை அம்முடிவை எடுக்கும் அளவுக்கு வடகொரியா நடந்து கொண்டால், அது அந்நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவை தேடித் தரும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

