மத்திய கிழக்கில் விரிவடையும் போர்: எகிப்தை மிரட்டும் ஹவுதி ஏவுகணைகள்!
ஏமனில் ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், சவுதிக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்க எகிப்து முடிவு செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹவுதிகள் எகிப்தின் நடவடிக்கையை கண்டித்து, இது பிராந்திய அமைதிக்கு எதிரானது என எச்சரித்துள்ளனர்.
செய்தியாளர் - M.மீரா
ஏமனில் ஈரான் ஆதரவுப் பெற்ற ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது . ஹவுதிகள் சவுதி அரேபியாவின் பல முக்கிய விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள சவுதிக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்க எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எகிப்து நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அக்டோபர் 17-ஆம் தேதி எகிப்து தனது ராணுவத்தின் தயார் நிலையை வெளிப்படுத்தும் வகையில் நேரடி ஆயுதப் பயிற்சிக் காட்சிகளை வெளியிட்டது. இதில் பீரங்கிகள், ஏவுகணைகள், விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படைப் பிரிவுகள் பங்கேற்றன. தற்போது இந்த ராணுவப் பயிற்சியும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து எகிப்தின் நிலைப்பாட்டுக்கு ஹவுதி அரசியல் பிரிவின் மூத்த தலைவரான முகமது அலி அல்-ஹவுதி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு எகிப்து ஆதரவு தருவது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், மாறாக இது ஏமன் குடியரசுக்கு எதிராக எகிப்து நேரடியாகப் போரை அறிவிப்பதற்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 1960களில் ஏமனில் எகிப்து சந்தித்த மோசமான ராணுவ விளைவுகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஹவுதி தரப்பில் மறைமுக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா மற்றும் அதன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை (MBS) எவ்வகையிலாவது ஆதரிப்பது ஏமன் மீதான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என ஹவுதிகள் நேரடியாக எச்சரித்துள்ளனர்.
இந்த கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், சவுதி அரேபியாவுடனான தங்களின் ராணுவப் பங்களிப்பு முற்றிலும் தற்காப்பு நோக்கிலானது மட்டுமே என்று எகிப்து தெளிவுபடுத்தியுள்ளது. ஏமன் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், சவுதியின் இறையாண்மை மற்றும் புனிதத் தலங்களைப் பாதுகாப்பது மட்டுமே தங்களின் இலக்கு என்றும் எகிப்திய அதிபர் அல்-சிசி கூறியுள்ளார்.
இருப்பினும், செங்கடல் பகுதியில் ஹவுதி நடத்தும் தாக்குதல்களால் சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறும் வர்த்தகம் மற்றும் அதனால் எகிப்திற்கு வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதிக்கு எகிப்து ராணுவ ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

