\
Midair Hijack Threat Sparks Panic as Pilot Diverts United Flight
United Airlines reuters

நடுவானில் Hijack மிரட்டல்! அலறிய பயணிகள்.. விமானத்தை அவசரமாகத் திருப்பிய விமானி!

அமெரிக்காவில் விமானத்தைக் கடத்த மிரட்டிய பயணியின் செயலால், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக திருப்பப்பட்டது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் விமானத்தைக் கடத்த போவதாக பயணி ஒருவர் செல்போனில் மிரட்டல் தகவல் அனுப்பியதால், நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானம் அவசரமாகத் திருப்பி விடப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து நியூஜெர்சி மாநிலத்தின் நியூவர்க் (Newark) நகருக்குச் சனிக்கிழமை இரவு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 1681 புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 150 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.

United airlines
United airlines Reuters

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, 25 வயதான டான்டே மில்னே என்ற பயணி தனது செல்போனில் விமானத்தைக் கடத்தப் போவதாகவும், குறிப்பிட்ட இருக்கைப் பகுதியில் விமானத்தை மோதச் செய்வதாகவும் மிரட்டல் தகவல்களை டைப் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கவனித்த விமானப் பணிப்பெண், உடனடியாக விமானியின் அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விமானி பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி, விமானத்தை மீண்டும் லாஸ் வேகாஸுக்குத் திருப்ப முடிவு செய்தார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பேசிய விமானி, பயணி ஒருவர் விமானத்தைக் கடத்தப் போவதாகத் தகவல் அனுப்பியதைக் கண்ட பணிப்பெண் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

united airlines
united airlinesReuters

விமானம் இரவு சுமார் 11.05 மணியளவில் லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அங்கு காத்திருந்த போலீசார், டான்டே மில்னேவை கைது செய்தனர். பின்னர், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் முழுமையான பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பயங்கரவாதச் செயல்கள் தொடர்பாக மிரட்டல் விடுத்ததாகவும், தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் மில்னே மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், 10,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகையைச் செலுத்தி அவர் வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

விமானம் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாற்று ஏற்பாட்டில் நியூவர்க் புறப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. 2026-ஆம் ஆண்டில் இதுவரை வணிக விமானங்களில் பயணிகளின் ஒழுங்கீனமான செயல்கள் தொடர்பாக 1,400-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Midair Hijack Threat Sparks Panic as Pilot Diverts United Flight
உலகப் போர் அச்சம்? 90 நாட்களுக்குத் தயாராகும் அமெரிக்கா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com