26 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் மைக்ரோசாஃப்ட்!
உலகம் முழுவதும் பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பல்வேறு நாடுகளிலும் தனது கிளைகளை விரித்துள்ளது. இந்த நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் கோலோச்சி வந்த மைக்ரோசாப்ட், அந்நாட்டில் தனது நேரடி செயல்பாடுகளை மூட முடிவு செய்துள்ளது.
எனினும், பாகிஸ்தானில் தனது சொந்த அலுவலகத்தை நடத்துவதற்குப் பதிலாக, பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலம் சேவை செய்ய இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் தற்போதைய சேவைகள் அல்லது வாடிக்கையாளர் ஒப்பந்தங்களைப் பாதிக்காது எனவும், இந்தச் சேவைபோன்றே ஏற்கெனவே பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது எனவும், மேலும் சேவை தரத்தில் எந்தக் குறைவும் ஏற்படாது என்றும் பயனர்களுக்கு அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்தப் பணிநிறுத்தத்தால் ஐந்து ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் இதை மைக்ரோசாஃப்டின் பணியாளர் மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், மைக்ரோசாஃப்ட் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கான உரிமம் வழங்குதல் மற்றும் ஒப்பந்த மேலாண்மை போன்ற முக்கியமான பணிகளை அயர்லாந்தில் உள்ள அதன் ஐரோப்பிய மையத்திற்கு மாற்றியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அரசாங்கம் 5,00,000 இளைஞர்களுக்கு ஐடி சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் மைக்ரோசாஃப்ட்டும் ஒரு பகுதியாக இருந்தது. அதே நேரத்தில், கூகுள் பாகிஸ்தானின் கல்வித் துறையில் முதலீடு செய்து, நாட்டில் Chromebook உற்பத்தியை ஆராய்ந்து வருகிறது. மைக்ரோசாஃப்டின் வெளியேற்றம், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் பாகிஸ்தானின் திறன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைவர் ஜவாத் ரெஹ்மான், ”இந்த வெளியேற்றம் வெறும் வணிக நடவடிக்கை மட்டுமல்ல. இது, நாட்டின் வணிகச் சூழல் குறித்த கடுமையான எச்சரிக்கை. பல ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் அமைத்த அடித்தளத்தை பாகிஸ்தான் கட்டியெழுப்பத் தவறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.