மெக்சிகோ லாஹுலில்பேன் என்ற இடத்தில் எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் எரிவாயு குழாய் உடைந்ததில் அதில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து ஆறாக ஓடியது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்த பாத்திரங்கள், பக்கெட்டுகளை கொண்டு, கச்சா எண்ணெய்யை பிடிக்க அங்கு முண்டியடித்தனர். எதிர்பாரதவிதமாக அப்போது ஏற்பட்ட உராய்வு மற்றும் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பலத்த தீக்காயடைந்த சுமார் 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து எரிபொருள் குழாய் வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெறுவோரில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் அதிபர் லோபஸ் ஓப்ரேடாரும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எரிவாயுவை திருடும் நோக்கில், குழாயை சிலர் உடைத்ததால்தான் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து எரிவாயு திருட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.