அமெரிக்காவைத் தொடர்ந்து மெக்சிகோவும் அதிரடி.. இந்தியாவுக்கு 50% வரி.. ஜன.1 முதல் அமல்!
அமெரிக்காவைப்போல மெக்சிகோ அரசும், இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதன்மூலம் உக்ரைனில் போரை தூண்டுவதாகவும் இந்தியா மீது குற்றம்சாட்டி, கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்தது. இதன்மூலம், அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கான வரியை, மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. எனினும், இரு நாடுகளுக்கு இடையே வரி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவைப்போல மெக்சிகோ அரசும், இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், அடுத்த ஆண்டு 3.76 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33,910 கோடி) கூடுதல் வருவாயை ஈட்ட முடியும் என அது தெரிவிக்கிறது. வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளி, பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்ற பொருட்கள் அத்தகைய வரிவிதிப்பை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.
அதேநேரத்தில் இத்தகைய வரி நடவடிக்கை, இருதரப்பு வர்த்தகத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இது 2024ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு $11.7 பில்லியனை எட்டியது. மெக்சிகன் ஏற்றுமதிக்கான ஒன்பதாவது இடமாக இந்தியா உள்ளது. தற்போது, இந்தியா மெக்சிகோவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது. ஓர் அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் மெக்சிகோவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 8.9 பில்லியன் டாலராக இருந்தது, இறக்குமதி 2.8 பில்லியன் டாலராக இருந்தது. அதே ஆண்டில், இந்தியாவிலிருந்து மெக்சிகோவுக்கு மோட்டார் கார்கள், வாகனப் பாகங்கள் மற்றும் பிற பயணிகள் வாகனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.
இப்போது, மெக்சிகோ இந்தப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதால், அடுத்த ஆண்டு இறக்குமதி பாதிக்கப்படலாம். மேலும், இந்தியா மட்டுமின்றி, இத்தகைய வரிவிதிப்பை தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் எதிர்கொள்ள இருக்கின்றன. ஆனால், இத்தகைய வரிவிதிப்பு, ட்ரம்பை திருப்திப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், அமெரிக்கா மெக்சிகோவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. தவிர, அமெரிக்க-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தையும் மறு ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

