போதைப்பொருள் மன்னன் சுட்டுக் கொலை.. மெக்சிகோவில் வெடித்த வன்முறை!
மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், எல் மென்சோ என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், எல் மென்சோ என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை வைத்து மெக்சிகோ உளவுத்துறை அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள தபால்பா என்ற மலைப்பகுதி கிராமத்தில் அவர் மறைந்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மெக்சிகோ சிறப்புப் படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். அப்போது எல் மென்சோவின் ஜாலிஸ்கோ கார்டெல் கும்பலுக்கும் ராணுவத்திற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் காயமடைந்த எல் மென்சோ, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். எல் மென்சோவின் மரணத்தைத் தொடர்ந்து, மெக்சிகோவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. ஜாலிஸ்கோகார் டெல் உறுப்பினர்கள் பேருந்துகள் மற்றும் லாரிகளை தீயிட்டு கொளுத்தி சாலைகளை மறித்தனர். இந்த வன்முறையில் 25 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல் மென்சோ உலகின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கும்பலின் தலைவர். அமெரிக்கா இவரைப் பிடிக்க 15 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. முன்னாள் போலீஸ் அதிகாரியான இவர், ராணுவ ஹெலிகாப்டர்களையே சுட்டு வீழ்த்தும் அளவுக்கு நவீன ஆயுதங்களைக் கொண்டு தனது சாம்ராஜ்யத்தை நடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

