மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார் மெக்சிகோ அழகி ஆன்ட்ரியா மீஸா - இந்திய அழகி நான்காம் இடம்!
அமெரிக்காவில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில், மெக்சிகோவை சேர்ந்த ஆன்ட்ரியா மீஸா பட்டம் வென்றார்.
இந்திய அழகி அடிலைன் காஸ்டிலினொ நான்காம் இடத்தைப் பிடித்தார். 69 ஆவது ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் போட்டி 2020 ஆம் ஆண்டு இறுதியில் நடக்க இருந்தது, கொரோனா சூழல் காரணமாக இப்போட்டி இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. போட்டியின் இறுதி நிகழ்ச்சி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் மெக்சிகோ அழகி ஆன்ட்ரியா மீஸா ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை தட்டிச்சென்றார். 73 நாடுகளைச் சேர்ந்த அழகிகளை பின்னுக்குத்தள்ளிய 26 வயது ஆன்ட்ரியா மீஸாவுக்கு 2019 ஆம் ஆண்டில் பட்டம் வென்றவரான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஸோஸிபினி துன்ஸி மகுடத்தை சூட்டினார்.
பிரேசில் அழகி ஜூலியா ஹாமா இரண்டாம் இடத்தையும், பெரு நாட்டின் ஜானிக் மாசெட்டா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்திய அழகியான 22 வயது அடிலைன் காஸ்டிலினொ நான்காம் இடத்தைப் பிடித்தார். 1991, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்றாம் முறையாக மிஸ் யூனிவர்ஸ் பட்டம் மெக்சிகோவுக்கு சென்றுள்ளது.