உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா

உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா
உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா

மேகாலாயா சுரங்கத்துக்குள் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேகாலயாவில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களால் நீர் மாசு ஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து, நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் 2014 ஆம் ஆண்டு தடைவிதித்தது. இருந்தாலும் அங்கு சட்டவிரோதமாக, நிலத்துக்கு அடியில் எலிவளை போல துளையிட்டு யாருக்கும் தெரியாமல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. தண்ணீர் நுழைந்ததும் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் வெளியேறினர். மேலும் 15 பேர் சுரங்கத்தினுள் இருந்து வெளிவர முடியாமல் சிக்கினர்.

கடந்த இரு வாரங்களாக சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த நூறு பேர், அப்பகுதியில் முகாமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக உயர் அழுத்த பம்புகளை கொடுத்து உதவ கிர்லோஸ்கர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் சிக்கிய போது மீட்க உதவியது. இது குறித்து பேசியுள்ள கிர்லோஸ்கர் நிறுவனம், நாங்கள் மேகாலயா அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்காக நாங்கள் கவலை கொள்கிறோம். அவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென்பதே எங்கள் எண்ணம் என்று தெரிவித்துள்ளது.

மீட்புப்பணியின் தற்போதைய நிலை குறித்து பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ‘சுரங்கத்திற்குள் இருந்த துர்நாற்றம் அடிப்பதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அது என்ன துர்நாற்றம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அது சுரங்கத்திற்குள் தேங்கியுள்ள நீரினால் கூட ஏற்பட்டு இருக்கலாம். துர்நாற்றம் குறித்து எங்களுக்கு தெளிவில்லை. ஆனாலும் மீட்புப் பணியை நாங்கள் துரிதமாக்கியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com