#FactCheck : செக்ஸ் விளையாட்டுக்கு நாங்கள் அனுமதி கொடுத்தோமோ? பதறிப்போய் விளக்கம் கொடுத்த ஸ்வீடன்!

செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரிப்பதோடு அதை போட்டியாக நடத்த ஸ்வீடன் நாடு முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் பலவும் கடந்த வாரம் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால், அது, முற்றிலும் பொய் என ஸ்வீடன் நாட்டிn விளையாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்வீடன்
ஸ்வீடன் twitter

செக்ஸ் போட்டியா?? - மின்னல் வேகத்தில் வைரலான தகவல்!

உலகில் முதல்முறையாக உடலுறவை (Sex) விளையாட்டாக அங்கீகரித்து, அதை ஒரு விளையாட்டாக ஸ்வீடன் நாடு, இன்றுமுதல் (ஜூன் 8) நடத்த இருப்பதாகக் கடந்த வாரம் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு கூடியது. அதிலும், ஓர் வெப்சைட் (அநேகமாக அது போனோகிராபி சம்பந்தமானது) ஒன்று கவுண்டன் நேரத்தைத் தொடங்கியதுடன், செக்ஸ் சாம்பியன்ஷிப்பின் ஒவ்வொரு நிகழ்வுகளைவும் லைவ்வில் படம்பிடித்து காட்டப்போவதாக விளம்பரம் செய்தது. அந்த அளவில் இந்த செய்தி வைரலாக உலகம் முழுவதும் பல தரப்பினரால் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டது.

இதனால் இந்த விளையாட்டு குறித்த ஆர்வம் மேலும் பரபரப்பானது. அதாவது, மற்றொரு மீடியா ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன் உடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி உட்பட, நிகழ்வில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டது.

இதுஒருபுறம் இருக்க, ஓர் அந்தரங்க விஷயத்தை இப்படி பொதுவெளியில் விளையாட்டு என்ற பெயரில் நடத்துவது மிகவும் கேவலமான விஷயம் என எதிர்ப்புக் குரல்களும் வலுக்கத் தொடங்கின. இந்த நிலையில், அப்படிப்பட்ட ஒரு சாம்பியன்ஷிப் நடத்தப்படவில்லை. இது ஒரு பொய்யான தகவல் என ஸ்வீடன் நாட்டின் விளையாட்டுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவது: ஸ்வீடன்

இதுகுறித்து ஸ்வீடன் நாட்டின் விளையாட்டுக் கூட்டமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் அண்ணா செட்ஸ்மேன் (Anna Setzman) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சில சர்வதேச ஊடகங்களில் ஸ்வீடன் நாட்டின் விளையாட்டுகள் பற்றிய தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இவை அனைத்தும் பொய்யானவை. இதில் உண்மை இல்லை. ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில் (Swedish Sports Confederation), பாலியல் சம்மேளனம் (Sex federation) உறுப்பினராகியுள்ளதாக சில சர்வதேச ஊடகங்களில் தற்போது செய்திகள் பரவி வருகிறது. இது ஸ்வீடன் விளையாட்டு மற்றும் ஸ்வீடன் நாட்டின் மீதான மதிப்பை கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல். ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில், பாலியல் சம்மேளனம் (Sex federation) உறுப்பினராக இல்லை. இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்வீடன் நாட்டிலுள்ள செக்ஸ் கூட்டமைப்பின் தலைவரான டிராகன் பிராக்டிக், செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரியும் தங்களுடைய அமைப்பை இணைத்துக் கொள்ளவும் அந்நாட்டு விளையாட்டு கூட்டமைப்பிற்குக் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியே நிராகரிக்கப்பட்டிருக்க உள்ளது. ஆனால், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததை மட்டும் வைத்து டிராகன் பிராக்டிக், தங்களுக்கென ஓர் அமைப்பு எண் இருப்பதாகவும், மற்றதைப் போலவே செக்ஸும் ஒரு விளையாட்டு எனப் போலியாக அவர் செய்திகள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் போலிச் செய்தியின் பின்புலத்தில் டிராகன் பிராக்டிக்கே இருந்துள்ளார் என ஸ்வீடன் நாட்டின் பிரபல நாளிதழான Göteborgs-Posten தெரிவித்துள்ளது. லும், டிராகன் பிராக்டிக் உடலுறவை விளையாட்டாக வகைப்படுத்த விரும்பினார் எனவும், அவர் பல ஸ்ட்ரிப் கிளப்புகளை வைத்திருக்கிறார் எனவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

முதலில் இந்த செய்தியை உண்மையென நினைத்து பதிவிட்ட ஊடகங்கள் பலவும் தற்போது அதற்கான மறுப்பு விளக்கங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com