‘2020 ஜூன் 21 இல் உலகம் அழியும்’ மீண்டும் பொய்த்து போன மாயன் காலண்டர் ஆருடம்

‘2020 ஜூன் 21 இல் உலகம் அழியும்’ மீண்டும் பொய்த்து போன மாயன் காலண்டர் ஆருடம்
‘2020 ஜூன் 21 இல் உலகம் அழியும்’ மீண்டும் பொய்த்து போன மாயன் காலண்டர் ஆருடம்

மாயன் காலண்டர்படி 2020ஆம் ஆண்டு ஜூன் 21இல் உலகம் அழியும் என்று கூறியது பொய்த்து போய்விட்டது. இதற்கு முன்பும் இந்தக்கூற்று பொய்த்துப் போய் இருக்கிறது.

அவ்வப்போது நிகழும் பேரிடரே உலக அழிவு என்ற கருத்தும் நிலவுகிறது இது முதல் முறையல்ல. உலகம் அழியப்போகிறது என்று கேட்ட, பதறிய அனுபவம் இதற்கு முன்பும் மக்களுக்கு உண்டு. 1999ஆம் ஆண்டில் இருந்து 2000 பிறக்கப்போவதற்கு முன்பு அதிகம் பேசப்பட்டது, உலகம் அழியப்போகிறது என்றுதான். அப்போது இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி கிடையாது. ஆனாலும், உலகம் அழியப்போகிறது என்ற செய்தி தீயாக பரவியது. எண்பதின் பிற்பாதியில் மற்றும் தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு அந்த பீதியான உணர்வு இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கும். ஆனால் உலகம் அழியவில்லை. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பாதிப்பு பேரழிவாக பார்க்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழியப்போகிறது என்ற பரபரப்பு 2000ஐ மிஞ்சிய ரகம். அதற்கு காரணம் மாயன் இனத்தினர். 2009இல் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கும் அதில் பெரும் பங்கு உண்டு. மாயன் இனத்தினர் மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டவர்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயன் இனத்தினர், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே காலண்டரை தயாரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த காலண்டர் 5,126 ஆண்டுகளைக் கொண்டதாக இருந்தது.

மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டியில், டிசம்பர் 21 தேதி, 2012ல் உலகம் அழியும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்கு வலு சேர்ப்பது போல், கடந்த 2009ஆம் ஆண்டு 2012 என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி பயத்தை மேலும் அதிகரித்தது. அந்தப்படத்தை பார்த்தவர்கள் பயத்தின் உச்சத்திற்கே சென்றனர். ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியும் நல்லப்படியாகவே நகர்ந்தது.

இந்த நிலையில் தான் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்ற செய்தி வேகமாக பரவியது. உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைதான் பயன்படுத்தி வருகிறார்கள். ஆயிரத்து 752 ஆம் ஆண்டுக்கு பின்னரே இந்த காலண்டர் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன் நடைமுறையில் இருந்தது மாயன் மற்றும் ஜூலியன் காலண்டர்கள்தான். இரண்டுமே ஒரே தேதியில் வரும். ஆனால், கிரிகோரியன் காலண்டருக்கும் மாயன் காலண்டருக்கும் 8 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அப்படி பார்த்தால் ஜூலியன் மற்றும் மாயன் காலண்டர்படி நாம் தற்போது 2012ஆம் ஆண்டில் இருக்கிறோம், அதன்படி மாயன் காலண்டரில் உலகம் அழியபோவதாக குறிப்பிட்டிருக்கும் தேதி ஜூன் 21 என ஆய்வாளர் பாலோ டகாலோகுயின் தெரிவித்து இருந்தார். ஆனால் 2020 ஜூன் 21ஆம் தேதியையும் நாம் இயல்பாகவே கடந்திருக்கிறோம். 2012 போல 2020இல் பரவிய செய்தியும் பொய்த்து போய்விட்டது.

அதே நேரத்தில் உலகம் முழுவதும் அவ்வப்போது நிகழும் பேரிடரே மறைமுகமான உலக அழிவு என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சுனாமி, பெருவெள்ளம், பருவநிலை மாற்றத்தால் நாள் தவறி அல்லது முன்னதாக பெய்யும் பெருமழை, புயல், கொரோனா போன்ற நோய்கள், வெட்டுக்கிளி தாக்குதல் ஆகிய வடிவில் உலகம் அழிந்து வருகிறது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com