
லண்டனில் வீடின்றி வசித்து வருபவர் 46 வயதான லூயி டர்ன்புல். இவர், 3 வயதான மார்ஷல் மற்றும் 9 மாதங்களே ஆன மில்லியன்ஸ் (Marshall and Millions) என்ற நாய்களை வளர்த்து வந்தநிலையில், இந்த இரு நாய்களும், பெண் ஒருவரையும், அவரது வளப்பு நாயையும் தாக்கியதாக கடந்த 7-ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு துப்பாக்கிகளுடன் வந்த காவல்துறையினர் 7 பேர், மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் என்ற அந்த இரு நாய்களுடன், அதன் உரிமையாளரான லூயி டர்ன்புல் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது லூயி டர்ன்புல்லிடம் காவல்துறையினர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அவர்களை பார்த்து இரு நாய்களும் ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி சிறிய இடைவெளியில் குரைத்துக் கொண்டிருந்த அந்த இரு நாய்களையும், தங்களது துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
அதன்பின்பு, ஆபத்தான முறையில் நாயை கட்டுப்பாடில்லாமல் வைத்திருந்ததாகவும், பெண்ணை தாக்கிய குற்றத்திற்காகவும், நாய்களின் உரிமையாளரான லூயி டர்ன்புல்லையும் போலீஸ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் ஆகிய இரண்டு நாய்களுக்கும் நீதிக் கேட்டு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி, காவல்துறை மீது குற்றச்சாட்டும் மனுவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். நாய்களின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கவே அவ்வாறு சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் தரப்பிலும், தன்னை பாதுகாப்பதற்காகவே நாய்கள் குரைத்ததாக லூயி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்த பெண், நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்து அவரும் அதிர்ச்சியடைந்துள்ளார். உண்மையில் நாய்கள் அந்த பெண்மணியை தாக்கவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் இது சம்பந்தமாக நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், இறந்துபோன நாய்களுக்கு நீதிகேட்டு வீடியோ ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார். பொதுவாக ஒரு நாய், மற்றொரு நாயை பார்த்தால் குரைக்கும் என்றும், அவ்வாறே அந்த பெண்ணின் நாயை பார்த்து மார்ஷல் மற்றும் மில்லியன்ஸ் குரைத்ததாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். வீடில்லாதவர் என்பதற்காக காவல்துறையினர் இப்படி நடந்துகொள்ளலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.