மரணப்படுக்கையில் ஒரு திருமணம்: கேன்சர் நோயாளின் நெகிழ்ச்சி காதல்!
புற்றுநோயால் மரணப்படுக்கையில் இருக்கும் பெண்ணுக்கு காதலரோடு நடந்த திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள டென்னஸ்ஸி, மடிசோன்விலே பகுதியை சேர்ந்தவர் ரொண்டா பெவன்ஸ். 28 வயது. இவரது சிறுவயது நண்பர் மாட் மகெர். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ரொண்டாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சோதித்தனர். அப்போதுதான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். உடல் நிலை சரியாகிவிடும் என்றே நினைத்திருந்தார்கள். ஆனால், விதி விளையாடியது. கடந்த வாரம் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இனி அவர் பிழைக்க வாய்ப்பில்லை. மரண தருவாயில் இருக்கிறார் என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். நோய் உடல் முழுவதும் பரவிவிட்டது. ஒரு பக்க நுரையீரல் பாதிப்படைந்துவிட்டது. மூளையிலும் பாதிப்பை உருவாக்கிவிட்டது என்றனர்.
காதலனோடு சந்தோஷ வாழ்க்கை வாழ நினைத்த ரொண்டாவின் கனவு கருகியது. விஷயத்தை தோழி அமெண்டாவின் சொல்லி கண்ணீர் விட்டார் ரொண்டா. ஆறுதல் கூறினார் அமெண்டா.
இப்போது டாக்டர்கள், ’அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிடுங்கள், இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்’ என்று கூறிவிட்டனர். இதை நாகரிகமாக தோழியிடம் சொன்னார் அமெண்டா.
’எனக்கு வீட்டுக்குப் போகணும்’ என்ற ரொண்டா, ‘மாட் மகெரை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். அவர்தான் எனக்கு எல்லாம். எங்க கல்யாணம் நடக்க வேண்டும்’ என்றார் தோழியிடம்.
அவசரம் அவசரமாக மதபோதகர் ஒருவரை வீட்டுக்கு வரவழைத்தனர். தெரிந்த நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மூக்கில் டியூப் மாட்டிய நிலையில் படுத்திருந்த ரொண்டாவுக்கும் மகெருக்கும் ஆர்ப்பாட்டமில்லாத திருமணம் நடந்தது. ரொண்டாவின் கண்களில் ஆனந்த கண்ணீர்!
மறுநாள் எழுந்து திருமணப் புகைப்பட ஆல்பத்தை பார்த்து பரவசமடைந்தாராம் ரொண்டா.
இன்னும் எத்தனை நாள் அவர் உயிரோடிருப்பார் என்று தெரியாது. ஆனால், ’அவளுக்கு அழகான விழிகள்...’ என்று கண்ணீரில் கரைகிறார் காதலன் மாட் மகெரை!