உதவி கோரிய சிறு படகு.. மறுத்ததா ஜூக்கர்பெர்க்கின் சொகுசுப் படகு? அலாஸ்கா கடலில் நடந்தது என்ன?
அலாஸ்காவின் ஜூனோ (Juneau) மற்றும் பீட்டர்ஸ்பர்க் (Petersburg) பகுதிகளுக்கு இடையே 21 அடி நீள சிறிய படகு ஒன்று எரிபொருள் தீர்ந்து கடலில் சிக்கித் தவித்தது. இதையடுத்து, அமெரிக்கக் கடலோரக் காவல் படையைத் (US Coast Guard) தொடர்புகொண்டு அந்தப் படகு உதவி கோரியது. அதேநேரத்தில், மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கிற்குச் (Mark Zuckerberg) சொந்தமான 'லாஞ்ச்பேட்' (Launchpad) என்ற $300 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூபாய் 2,500 கோடி) மதிப்பிலான பிரம்மாண்ட சொகுசுப் படகு (Superyacht) அதற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தது.
இதற்கிடையே, அந்தச் சிறிய படகிற்கு உதவுவதற்காக 'வில்டர்னஸ் லெகசி' (Wilderness Legacy) என்ற சிறிய சுற்றுலாப் படகு (Cruise ship) முன்வந்து அதை மீட்டுச் சென்றது. அப்போது அந்தச் சுற்றுலாப் படகில் பயணம் செய்த மென்பொருள் உருவாக்குநரான மைக்கேல் லவ், "ஜூக்கர்பெர்க்கின் சொகுசுப் படகு மிக அருகில் இருந்தும், கடலோரக் காவல் படை தொடர்பு கொண்டபோது உதவி செய்ய மறுத்துவிட்டது" எனப் பயணிகளிடம் கூறியதாகத் தெரிகிறது. சுற்றுலாப் படகிலிருந்த பயணி ஒருவர் இதைச் சமூக வலைதளத்தில் பதிவிடவே, ஜூக்கர்பெர்க் படகு உதவி செய்ய மறுத்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இதுதொடர்பாக விளக்கமளித்த மார்க் ஜூக்கர்பெர்க்கின் செய்தித் தொடர்பாளர் பிரையன் பேக்கர், ”அந்தச் சம்பவத்தின்போது மார்க் ஜூக்கர்பெர்க்கோ அல்லது அவரது குடும்பத்தினரோ அந்தச் சொகுசுப் படகில் இல்லை. சொகுசுப் படகின் மாலுமிகள் வேறு ரேடியோ அலைவரிசையில் (Radio channel) இயங்கிக்கொண்டிருந்ததால், உதவி கோரிய அழைப்பு அவர்களுக்கு உடனடியாகக் கேட்கவில்லை. மேலும், மாலுமிகள் அந்தச் செய்தியைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்குள், அருகில் இருந்த மற்றொரு சுற்றுலாப் படகு உதவி செய்யத் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜூக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான 'லாஞ்ச்பேட்' படகு, உலகின் மிகப்பெரிய தனியார் சூப்பர் yachtகளில் ஒன்றாகும். இந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு டச்சு கப்பல் கட்டும் நிறுவனமான ஃபெட்ஷிப்பிடம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் இது சுமார் 387 அடி (118 மீட்டர்) நீளம்கொண்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இந்த yacht-இன் மதிப்பு சுமார் $390 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபெட்ஷிப் இதுவரை கட்டிய yacht-களிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது.

