விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது ’பேஸ்புக்’ மார்க்கின் சகோதரி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ, மார்க் ஜக்கர்பெர்க். இவரது சகோதரி ராண்டி. சமீபத்தில் மெக்சிகோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அலாஸ்கா விமானத்தில் வந்துகொண்டிருந்தார். முதல் வகுப்பில் வந்துகொண்டிருந்த அவருக்கு அருகில் ஆண் பயணி ஒருவர் இருந்தார். மதுபானம் வழங்கப்பட்டபோது ராண்டியை பார்த்து சிரித்துக்கொண்டே ஆபாசமாக பேசினார். அவர் தன்னைத் தொட்டுப்பேசுவதை பற்றி கூறியுள்ளார். பின் அங்கிருந்த மற்ற பெண் பயணிகளின் உடல் உறுப்புகளைப் பற்றியும் ஆபாசமான கருத்துக்களைச் சொல்லியுள்ளார்.
இதனால் கோபமடைந்த ராண்டி, விமானப் பணிப்பெண்களிடம் புகார் கூறினார். அவர்கள், இதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல், ’அவர் அடிக்கடி இந்த விமானத்தில் பயணிப்பவர், நீங்கள் வேண்டுமானால் பின்னால் வேறு சீட்டில் உட்கார்கிறீர்களா?’ என்று கூறியுள்ளனர்.
கடுப்பான ராண்டி, ’பாதிக்கப்பட்ட நான் ஏன் வேறு இடத்தில் உட்காரவேண்டும்?’ என்று கேட்டுள்ளார். பின்னர் இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டார். இதையடுத்து இச்சம்பவம் பரபரப்பானது.இந்நிலையில் அலஸ்கா விமான நிறுவனம், விமான ஊழியர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.