டொமினிகாவை பத‌ம் பார்த்த மரியா புயல்

டொமினிகாவை பத‌ம் பார்த்த மரியா புயல்
டொமினிகாவை பத‌ம் பார்த்த மரியா புயல்

டொமினிகா தீவை பதம் பார்த்த மரியா புயல் வீரியம் குறையாமல் தற்போது அமெரிக்காவின் விர்ஜின் தீவை ஆக்ரோஷமாக தாக்கி வருகிறது.

அடு‌த்த சில மணி நேரங்களில் போர்டோ ரிகோவை வலுவாக தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவ‌டிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரீபியன் தீவுகள், அமெரிக்கா மற்றும் கி‌யூபாவில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், இர்மா பயணித்த அதே பாதையில் மரியா புயலும் பயணித்து வருகிறது. அதன் கோர தாண்டவத்துக்கு டொமினிகா தீவு முதலில் பாதிப்படைந்தது. மரியாவின் தாக்குதலுக்கு 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 90 சதவீத வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைதொடர்புகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் டொமினிகாவில் மரியா ஏற்படுத்திய சேதம் குறித்த தகவ‌ல்கள் வெளியாகவில்லை. செயின்ட் லூசியா, மார்டினிக், டிரினிடாட் மற்றும் டொபேகோ தீவுகள் டோம்னிகாவுக்கு உதவ முன் வந்துள்ளன.

ஃபிரெஞ்சு தீவான குடாலோப்பில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்டினிக் தீவில் மின்‌சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதால் முழு தீவும் இருளில் மூழ்கியுள்ளது. தற்போது அதே வீரியத்துடன் விர்ஜின் தீவுகளை மரியா பதம் பார்த்து வருகிறது. அந்த தீவின் செயின்ட‌ கிராய்க்ஸ் பகுதியில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் மரியா புயலால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு வசிக்கும் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக போர்டோ ரிகோ மீது மரியாவின் பார்வை திரும்பி இருப்பதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை ‌நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்க‌ணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் விர்ஜின் தீவுகளிலும் புயல் பாதிப்பு இருப்‌பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன் இங்கு வீசிய இர்மா புயலால் 90 சதவீத வீடுகள் ஏற்கெனவே சேதம் அடைந்திருக்கும் நிலையில், தற்போது மரி‌யா புயல் மிர‌ட்டி வருவது அங்கு வாழும் மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com