விமானத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்த நபர்.. அச்சத்தில் அலறிய பிற பயணிகள்.. நடந்தது என்ன?

விமானத்தில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த பயணி ஒருவரால், சக பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.
Lufthansa
Lufthansaட்விட்டர்

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இரவு லூஃப்தான்சா (Lufthansa) என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கடுமையாக மூச்சு வாங்கியதுடன் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். தொடர்ந்து அவருக்கு மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியுள்ளது. இதில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதுள்ளார். அவருடைய அழுகையினால், சக பயணிகளும் பயத்தில் அலறியுள்ளனர். பின்னர், விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த மருத்துவர் ஆகியோர் இணைந்து அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுவாசத்தை மீட்பதற்காக சிபிஆர் நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், தீவிர முயற்சி செய்தும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

அப்பயணி உயிரிழந்ததை பைலட் அறிவித்தபோது விமானத்தில் இருந்தவர்கள் அமைதியில் மூழ்கிப்போயினர். பின்னர், இறந்தவரின் உடல் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு, விமானம் தாய்லாந்துக்குத் திருப்பிவிடப்பட்டது. நேற்று காலை தாய்லாந்தில் விமானம் தரையிறங்கியதும், உரியநடைமுறைகளுக்குப் பிறகு, அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானத்தில் நடந்த இந்த மரணம் தொடர்பான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என பயணிகள் சிலர் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தான்: இம்ரான்கான் கட்சி முன்னிலை.. ஆனால் கூட்டணி ஆட்சி அமைக்கும் நவாஸ் ஷெரீப்!

’அந்தப் பயணி விமானத்தில் ஏறும்போதே அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, குளிரிலும் அவருக்கு வியர்த்து கொட்டியது, வேகமாக மூச்சுவிட்டார்’ என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘அவரது நிலை இவ்வளவு மோசமாக இருந்தும் விமானி ஏன் விமானத்தை கிளப்பினார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.

அவருடைய மரணம் குறித்து லூஃப்தான்சா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “அவருக்கு உடனடி மற்றும் விரிவான முதலுதவி நடவடிக்கைகளை எங்களது விமானப் பணியாளர்களும் மருத்துவரும் செய்துள்ளனர். ஆனாலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய இறப்பிற்கு எங்களுடைய ஆறுதல். அதேநேரத்தில், அவருடைய திடீர் இறப்பால் விமானத்தில் பயணித்த சக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் வருந்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக மற்ற பயணிகள் 2 மணி நேரம் சிரமத்தை அடைந்ததாகக் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: மீன்களின் இனப்பெருக்க சத்தம்.. இரவில் உறங்காமல் தவிக்கும் அமெரிக்க மக்கள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com