சீனாவுடன் ஒப்பந்தம்.. இந்தியாவுக்கு எதிராக மீண்டும் களத்தில் குதித்த மாலத்தீவு அதிபர்! நடந்தது என்ன?

’இந்திய ராணுவம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட பிற பணியாளர்கள் அனைவருமே மே 10க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவர்’ என மாலத்தீவு அதிபர் முய்சு தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகம்மது முய்சு
முகம்மது முய்சுபுதிய தலைமுறை

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. மேலும், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு யுக்திகளை முன்னெடுத்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10க்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக இரு தரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ’ஒரு விமானத் தளத்தில் இருந்து இந்திய வீரர்கள் 2024 மார்ச் 10ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் 2024 மே 10-ம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள்’ என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, மாலத்தீவில் உள்ள மூன்று விமானத் தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாட்களில் முடிய உள்ள நிலையில், அந்த வீரர்களுக்குப் பதிலாக பணியாற்றக்கூடிய இந்திய தொழில்நுட்பக் குழு மாலத்தீவு சென்றுள்ளது. அவர்கள் விமானத் தளத்தின் பொறுப்பை ஏற்றதும் அந்தத் தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

இந்த நிலையில், சீனாவின் ராணுவ உதவியை இலவசமாக வழங்குவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது ஆகியன தொடர்பாக இருநாடுகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தான நிலையில், ’இந்திய ராணுவம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட பிற பணியாளர்கள் அனைவருமே மே 10க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவர்’ என மாலத்தீவு அதிபர் முய்சு தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com