12 நாளில் 3300 தொழிலாளர்கள் கைது: மலேசிய அரசு நடவடிக்கை
மலேசிய அரசு, 12 நாட்களில் 3,300 வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்துள்ளது.
மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு, பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்திருந்தது. சுமார் 1,61,000 தொழிலாளர்கள் தற்போது வரை பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு கால அவகாசம் முடிந்தது. இதையடுத்து மலேசிய குடிவரவுத்துறை, 3,323 தொழிலாளர்களை கைது செய்துள்ளது.
இதில் 1,230 பங்களாதேஷிகள், 825 இந்தோனேசியர்கள், மியான்மரைச் சேர்ந்த 273 பேர், வியட்நாமைச் சேர்ந்த 119 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 123 பேர், பிலிப்பைன்சை சேர்ந்த 95 பேர் அடங்குவர். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆள் கடத்தல்காரர்கள் வழியாக தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்துக்கு கடுமையான வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக விசா இன்றி மலேசியாவில் தங்க வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே மலேசிய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.