கூட்டணி விரிசலால் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு?: குழப்பத்தில் மலேசியா!
ஆளுங்கட்சி கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்று 2 ஆண்டுகள் கூட முழுமை பெறாத நிலையில் ராஜினாமா செய்தது ஏன்? பார்க்கலாம்.
உலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகாதீர் முகமது. 1981 முதல் 2003 வரை மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். 94 வயதான பிரதமர் மகாதீர் தலைமையிலான அரசு மலேசிய ஐக்கிய சுதேச கட்சி, அன்வர் இப்ராஹீம் தலைமையிலான மக்கள் நீதி கட்சி மற்றும் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. பக்காத்தான் ஹராப்பான் என அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தார் மகாதீர்.
தேர்தலுக்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப்பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியில் இருந்துவிட்டு, அதன்பின் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பதாக உறுதியளித்திருக்கிறார் மகாதீர். இதனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும்படி, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் நவம்பர் மாதம் நடைபெறும் ஏபெக் மாநாட்டிற்கு பிறகுதான் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவேன் என மகாதீர் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் கூட்டணி கட்சிகள் மகாதீரின் இந்த முடிவை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து தனது பதவியிலிருந்து விலகுவதாக கூறிய மகாதீர், தனது ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் ஒப்படைத்தார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி, மகாதீரரை மன்னர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மலேசிய மன்னர் அன்வர் இப்ராஹீமை ஆட்சியமைக்க அழைப்பாரா அல்லது தற்போதைய கூட்டணி குழப்பத்தை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.