‘சுதந்திரத்தை மறுக்கும் எந்தவொரு அரசையும் கண்டிப்பேன்’: சீனாவுக்கு மலாலா கண்டனம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ உயிரிழந்தது தொடர்பாக சீன அரசுக்கு, மலாலா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பள்ளிக்குச் செல்லாத சுமார் ஒரு கோடி குழந்தைகளிடையே கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் மேற்கு ஆஃப்ரிக்காவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சீனாவில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ இறந்தது தொடர்பாக, சீன அரசுக்கு மலாலா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் சுதந்திரத்தை மறுக்கின்ற எந்தவொரு அரசையும் தான் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சீனாவின் லியு சியாபோ புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு சீன அரசுக்கு எதிராக கலகத்தைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சமீபத்தில் சிறையிலிருந்து ஷென்யாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

