கொரோனா + ட்ரம்ப் விளைவு: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் 4 முக்கிய மாற்றங்கள்!

கொரோனா + ட்ரம்ப் விளைவு: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் 4 முக்கிய மாற்றங்கள்!
கொரோனா + ட்ரம்ப் விளைவு: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் 4 முக்கிய மாற்றங்கள்!

கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப் போகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் வயதான நபர் ஜோ பைடன். இம்முறை அதிபர் பதவியேற்பு விழாவில் நான்கு முக்கிய மாற்றங்கள் இருக்கும். அவை:

  • 152 ஆண்டுகளில் முதல் முறை: வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில், பதவி முடியும் அதிபர், புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்தளிப்பார். பின்னர் இவர்கள் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். 2017ஆம் ஆண்டு ஒபாமா, ட்ரம்புக்கு விருந்தளித்தார். ஆனால், இம்முறை அவ்வாறு நடைபெற சாத்தியமில்லை. ஏனெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். புதன்கிழமை காலையிலேயே அவர் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 152 ஆண்டுகளில் பதவிகாலம் முடியும் அதிபர், புதிய அதிபரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன்முறை.
  • கொண்டாட்டம் இல்லை: வழக்கமாக பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். நகரம் முழுவதும் அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். ஆனால், ஜனவரி 6ஆம் தேதி நடந்ததை போன்ற வன்முறை மீண்டும் நிகழாமல் தடுக்கும் வண்ணம், வாஷிங்டன் நகரமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தக் கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை. வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொள்கின்றனர். முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
  • நடன நிகழ்வு ரத்து: பதவியேற்பு நிகழ்ச்சியில் லேடி காகா தேசிய கீதம் பாட இருக்கிறார். இது தவிர ஜெனிபர் லோபஸின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 1949-க்கு பிறகு முதன்முறையாக பதவியேற்பு விழாவுக்கான நடன நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நடன நிகழ்ச்சி நடைபெறும் வால்டர் இ வாஷிங்டன் மையம், கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
  • ஆன்லைனில் அணிவகுப்பு: ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸும், கமலா ஹாரிஸுக்கு நீதிபதி சோடாமேயரும் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளனர். வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்முறை ஆன்லைனில் நடைபெறும் என்றும், லைவ் ஸ்டீரிமிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com