10 பில்லியன் டாலர் வழக்கில் ட்ரம்புக்கு மரண அடி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரபல செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) மீது தொடர்ந்த 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இதே விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர முடியாத வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ட்ரம்புக்கு தொடர்பு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மறுத்த ட்ரம்ப், அந்தச் செய்தி தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்தச் செய்தி நிறுவனத்தின் மீதும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும், ஊடகத் துறை பிரபலமான ரூபர்ட் முர்டோக் மீதும் 10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி சனிக்கிழமையன்று வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செய்தி நிறுவனம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை வெளியிட்டது என்பதை நிரூபிக்க ட்ரம்ப் தரப்பு போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
வழக்கின் பின்னணி - 2003-ஆம் ஆண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 50-வது பிறந்தநாளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆல்பத்தில் ட்ரம்பின் பெயரில் ஒரு கடிதமும், ஆபாசமான ஓவியமும் இருந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆல்பத்தை எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த கிஸ்லேன் மேக்ஸ்வெல் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அதில், பெண் உருவத்தின் ஓவியத்தைச் சுற்றி சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும், இறுதியில் ரகசியங்களைக் குறிப்பிடும் வகையில் வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருந்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் கடிதத்தைத் தான் எழுதவில்லை என்று ட்ரம்ப் மறுத்தார். செய்தி முற்றிலும் தவறானது என்றும் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், திருத்தப்பட்ட மனுவைத் தாக்கல் செய்ய ட்ரம்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மே மாதம் மீண்டும் மனு தாக்கல் செய்து 10 பில்லியன் டாலர் இழப்பீடு கோரினார்.
தற்போது அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். குறிப்பாக, 'With Prejudice' என்ற அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இதே விவகாரத்தில் மீண்டும் வழக்கு தொடர முடியாது.
