கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் மாவீரர் நாள் அஞ்சலி
இலங்கையில் தமிழர்கள் அதிகளவு வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். குறிப்பாக உச்சக்கட்ட போர் நடைபெற்ற 2009ல் ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக நவம்பர் 27 ஆம் தேதி விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மாவீரர் நாள் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆண்டுதோறும் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை அனுசரித்து வருகிறார்கள்.
இலங்கையில் போருக்கு பின்னர் மாவீரர் நாள் அனுசரிக்க அதிக கட்டுப்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் உள்ளன. எனினும் இலங்கையில் தமிழர்கள் அதிகளவு வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் நேற்று மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னாரிலும், கிழக்கு பகுதிகளில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். ராணுவத்தினர் நெருக்கடிகள் கொடுத்தபோதும் அதையும் தாண்டி மாவீரர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.