ரஷ்யா | பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படம்.. வெடித்தது சர்ச்சை!
இந்தியாவின் தேசத் தந்தை என அழைக்கப்படுபவர், மகாத்மா காந்தியடிகள். இந்த நிலையில், இவருடைய படம் அச்சிடப்பட்ட பீர் கேன்கள் ரஷ்யாவில் விற்பனையாகி வருகின்றன. ரஷ்ய பிராண்டான ரிவோர்ட்டில் இருந்து மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதில், அவருடைய கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
மகாத்மா காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் மதுவிலக்கை பெரிய அளவில் ஊக்குவித்த நிலையில், இது முரண்பாட்டை விளைவிக்கிறது என இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மதுபான பிராண்டுகள் தங்கள் கேன்கள் மற்றும் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பல ஆண்டுகளாக, காந்தியின் படத்தை மதுபான பிராண்டுகளுடன் இணைப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
2019-ஆம் ஆண்டில், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும், அதன் மதுபான பாட்டில்களில் காந்தியின் படத்தைப் பதித்ததற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டது. அதே ஆண்டு, மதுபான ஆலை ஒன்று அதன் பீர் தயாரிப்புகளில் ’மகாத்மா இந்தியா பலே ஆலே’ எனப் பெயரிட்டது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின், அந்த நிறுவனம் மதுபானத்திற்கு பெயரை மாற்றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று, தனது பீர் கேன்கள் மற்றும் பாட்டில்களில் காந்தியின் முகத்தைப் பதித்திருந்தது. இது தொடர்பாக, ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.