பிரதமராக இருந்தது 45 நாள்தான்.. வாழ்நாள் முழுக்க லிஸ் ட்ரஸ் பெறப்போகும் தொகை இவ்வளவா?

பிரதமராக இருந்தது 45 நாள்தான்.. வாழ்நாள் முழுக்க லிஸ் ட்ரஸ் பெறப்போகும் தொகை இவ்வளவா?

பிரதமராக இருந்தது 45 நாள்தான்.. வாழ்நாள் முழுக்க லிஸ் ட்ரஸ் பெறப்போகும் தொகை இவ்வளவா?

பிரிட்டனின் குறுகிய கால பிரதமராக இருந்தாலும் லிஸ் ட்ரஸ் தொடர்ந்து பொது வாழ்வில் இருப்பதற்காக கொடுக்கப்பட இருக்கும் தொகைதான் நெட்டிசன்களை மிரள வைத்ததோடு எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக போரிஸ் ஜான்சனுக்கு தனது பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் லிஸ் ட்ரஸே பிரதமராக தேர்வானார். அவருக்கு பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இங்கிலாந்தின் பொருளாதாரத்தை நிலைநாட்டுவேன் என்றும், வரி விதிப்பு தொடர்பான திட்டங்களை முன்வைத்தே லிஸ் ட்ரஸ் ஆதரவை திரட்டினார். இருப்பினும் லிஸ் ட்ரஸின் இந்த வியூகங்கள் எதுவும் அவருக்கு கைகூடவில்லை என்பது பதவியேற்ற 45வது நாட்களே ராஜினாமா செய்யும் அளவுக்கு இட்டுச் சென்றதன் மூலம் அறிய முடிகிறது.

பிரிட்டன் பொருளாதாரம் தடுமாற்றத்தை சந்தித்ததால் கன்சர்வேடிவ் கட்சிக்கும் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. ஏற்கெனவே இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் அழுத்தமும் கூடவே அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி லிஸ் ட்ரஸ் நேற்று முன் தினம் (அக்.,20) பிரதமர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டின் குறுகிய காலம் பிரதராக பதவி வகித்தவர் என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறார்.

45 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தாலும், பிரதமராக பணியாற்றியதன் காரணமாக லிஸ் ட்ரஸுக்கு தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பொதுவாழ்வில் தொடர்ந்து செயல்பட இருக்கும் லிஸ் ட்ரஸுக்கு ஆண்டுதோறும் 1,15,000 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரத்து 529 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட இருக்கிறது.

பொதுத் தொண்டில் ஈடுபடும் முன்னாள் பிரதமர்களுக்கு Public Duty Costs Allowance (PDCA) என்பது வழங்கப்பட வேண்டும் என்பது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். கோர்டன் பிரவுன், டேவிட் கேமரூன், தெரசா மே உள்ளிட்ட 5 பிரதமர்கள் ஏற்கெனவே இந்த பணபலன்களை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது லிஸ் ட்ரஸும் இணைந்துள்ளார்.

இது பொதுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான உண்மையான செலவைச் சந்திக்க மட்டுமே பணம் செலுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிட்டனின் பொருளாதார நிலையை அறிந்து லிஸ் ட்ரஸ் தானாக முன்வந்து இந்த தொகை வேண்டாம் எனச் சொல்ல வேண்டும் என இங்கிலாந்து மக்கள் பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com