விளக்குகளை அணையுங்கள் - இன்று கடைப்பிடிக்கப்படுகிறது ‘எர்த் ஹவர்’
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று ‘எர்த் ஹவர்’ எனப்படும் புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகத்தின் மிக பெரிய சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான எர்த் ஹவரின் போது இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை உலகின் பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் விளக்குகளை அணைத்து இந்த தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். உலகில் உள்ள முக்கிய இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்படும்.
வருடம்தோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை புவி நேரம் கடைபிடிக்கப்படுகிறது. இது புவி நேரம் கடைப்பிடிக்கப்படும் 10 வது ஆண்டாகும். இந்த நிகழ்ச்சியை உலகளாவிய இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு, இன்று 7000-த்திற்கும் மேற்பட்ட நகரங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தலைநகர் டெல்லி உட்பட பல நகரங்களும் புவி நேரத்தில் பங்கேற்கும்.
இன்று இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அனைத்து மின்னனு சாதனங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் உலகம் முழுவதும் 60 நிமிடங்கள் மின்சாரத்தை சேமிப்பது மட்டுமின்றி, மின்சாரத்தை வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வும் பொதுமக்களிடையே ஏற்படும் என்ற நோக்கத்தில் இந்தப் புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.